ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் உண்ணாவிரதம் - திருச்செந்தூரில் பரபரப்பு


ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் உண்ணாவிரதம் - திருச்செந்தூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 April 2020 3:45 AM IST (Updated: 16 April 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் அரசின் நிவாரணத்தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் ஜீவா நகரில் ரேஷன் கார்டு இல்லாத 43 குடும்பத்தினர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித்தொகை, இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படாததால் வறுமையில் வாடுகின்றனர். எனவே, அவர்கள் தங்களுக்கு அரசின் உதவித்தொகை, இலவச ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலையில் அங்குள்ள தெருவில் அமர்ந்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே, திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், மண்டல துணை தாசில்தார் கோபால், வட்ட வழங்கல் அலுவலர் பொன்னுலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கணேசபெருமாள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரேஷன் கார்டு வழங்க ஏற்பாடு

அப்போது அதிகாரிகள் கூறுகையில், “தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், எந்தவித போராட்டமும் நடத்த அனுமதி இல்லை. ஊரடங்கு காலம் முடிந்த பின்னர், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்படும்“ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஊரடங்குக்கு மத்தியில் திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story