தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. பெரும்பாலான இடங்களில் குளம், ஆறுகளில் பிடிக்கப்பட்ட கெண்டை, சிலேபி மீன்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. மேலும், கூண்டுகள் மற்றும் குளங்கள் அமைத்து வளர்க்கப்பட்ட மீன்களும் விற்பனை செய்யப்பட்டன. அந்த மீன்களும் அதிக விலைக்கு விற்பனையானது.
மீன்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் மீன்பிடி தொழிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது, மீனவர்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக செல்வதை தவிர்க்கும் வகையில், சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும், ஒரு படகில் 1 முதல் 4 பேர் மட்டும் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து சிறிய மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடித்து வந்தனர். அவர்கள் வலையில் சாளை, விளமீன், பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டன. அவற்றை மீனவர்கள், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் மொத்தமாக விற்பனை செய்தனர்.
Related Tags :
Next Story