தேவையில்லாமல் வீதியில் சுற்றாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி
தேவையில்லாமல் வீதியில் சுற்றாதீர்கள் என்று வாகன ஓட்டிகளை பார்த்து கையெடுத்து கும்பிட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் ஊரடங்கு அமலில் உள்ளதால் சாலைகளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைக்கிறார்கள். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூரில் அதிகமாகி வருவதால் வீதிகளில் சுற்றுவதற்கான தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் முறை குறித்தும் வீதியில் சுற்றுத்திரிவதால் எந்தெந்த முறையில் கொரோனா வைரஸ் பரவும் என்பதையும் விரிவாக விளக்கி கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்தால் அதனால் கிடைக்கும் தண்டனை விவரம் மற்றும் விளைவுகள் குறித்தும் எடுத்து கூறினார்.
பின்னர் அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு பேசும்போது, ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருந்தால் உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருந்தால் சமுதாயம் பாதுகாப்பாக இருக்கும். உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன், தேவையில்லாமல் வீதியில் சுற்றித்திரிய வேண்டாம். நாட்டுக்காக, நமது வீட்டுக்காக, அரசின் சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வாருங்கள். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். ஒற்றுமையாக இருந்து இந்த நோயை விரட்டுவோம் என்றார். அதற்கு வாகன ஓட்டிகள் அனைவரும் சப்-இன்ஸ்பெக்டருக்கு நன்றி தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story