தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு - போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் நடக்கும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மேலூர் காந்தி பூங்கா, முகமதியாபுரம் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று பார்வையிட்டார்.
இதுபோல் கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட சொக்கலிங்கபுரம் பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார். மேலும் அந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி யாரேனும் வெளியே சுற்றி வருகிறார்களா என ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படுவதையும் அவர் ஆய்வு செய்தார்.
மாவட்ட காவல்துறை சார்பில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மேலூர் மில்கேட் பகுதியில் தங்கியிருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 17 தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். இதுபோல் ஒத்தக்கடை, நரசிங்கம், அரும்பனூர் மற்றும் கொடிக்குளம் ஆகிய ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 112 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கினார்.
ஊரடங்கு உத்தரவில் அறிவித்துள்ள சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடித்து கொரோனா நோயினை கட்டுப்படுத்த மதுரை மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story