செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ரத்த மாதிரி ஆய்வகம் ஓரிரு நாளில் செயல்படும் - மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் ரத்த மாதிரிகளுக்கான ஆய்வகம் இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பட உள்ளதாக மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்திமலர், அரசு மருத்துவ கண்காணிப்பாளர், துணை மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்திமலர் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் சிகிச்சைக்காக 240 படுக்கை வசதிகளும், 55 செயற்கை சுவாச கருவிகளுடன் கூடிய படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. தற்போது வரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுபவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கே அனுப்பி வருகிறோம்.
ரத்த மாதிரி ஆய்வகம்
இதன் காரணமாக கொரோனா தொற்று உள்ளவர்களின் ரத்த மாதிரி ஆய்வு அறிக்கை வந்து சேர காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் அவர்களின் ரத்த மாதிரியை முழுமையாக ஆய்வு செய்யக்கூடிய ஆய்வகம் இன்னும் ஓரிரு நாட்களில் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. மீதமுள்ள நோய் தொற்று அதிகமானவர்கள் சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சிகிச்சை பிரிவில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story