கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்


கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்
x
தினத்தந்தி 16 April 2020 5:00 AM IST (Updated: 16 April 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக தனிநபர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் என்றும், அவர்கள் போன் செய்தால் வீட்டுக்கே வந்து வினியோகிக்கப்படும் என்றும், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை, 

இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், காய்கறி வாங்க வெளியே செல்வதை தவிர்க்கும் பொருட்டும், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று காய்கனிகளை விற்பனை செய்து வருகிறது.

பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்புகொண்டு பயன்பெற்று வருகிறார்கள். 7305050541, 7305050542, 7305050543, 7305050544 மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு புக்கிங் செய்த அனைவருக்கும் காய்கறிகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டுள்ளது.

அலட்சியம்

மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். மேலும் ஒரு குடும்பத்திற்கு 5 அல்லது 6 நாட்களுக்கு தேவையான சுமார் 15 வகை காய்கறிகளை பாக்கெட் செய்து ரூ.220-க்கு சுகி, சுமோட்டோ நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. சி.எம்.டி.ஏ.வின் இணையதளமான www.cm-d-a-c-h-e-n-n-ai.gov.in மூலமும் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்தாலும் சிலர் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேரில் வந்து காய்கறிகள் வாங்கி செல்கிறார்கள். அவ்வாறு வரும் நபர்களில் பெரும்பாலானோர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

வரவேண்டாம்...

ஆகவே, தனிநபர்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக கோயம்பேடு சந்தைக்கு நேரடியாக வரவேண்டாம் என்று கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழுவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி கொரோனா வைரஸ் நோய் தொற்றுப்பரவலை தடுக்க உதவ வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story