மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது - மும்பை உள்பட 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது - மும்பை உள்பட 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 16 April 2020 5:15 AM IST (Updated: 16 April 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த மும்பை உள்பட 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

மும்பை, 

கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்த தொற்று நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 684 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 232 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 916 ஆக அதிகரித்தது. பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி இருப்பது மாநில மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மேலும் 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருப்பதால், பலியானோர் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்து இருக்கிறது. அதே வேளையில் இதுவரை 295 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சற்று ஆறுதலான செய்தியை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

இதற்கிடையே மாநில தலைநகர் மும்பையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 183 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,936 ஆக அதிகரித்து, 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டதால், அங்கு இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து உள்ளது.

3 மண்டலங்களாக பிரிப்பு

கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பசுமை மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி அதிக பாதிப்பு உள்ள மும்பை, மும்பை புறநகர், புனே, தானே, நாக்பூர், பால்கர், ராய்காட், நாசிக், அவுரங்காபாத், அகமதுநகர், சாங்கிலி ஆகிய 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது அதிக ஆபத்தை உணர்த்தும் இந்த மாவட்டங்களில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள்

இதேபோல தலா 15-க்கும் குறைவான கொரோனா நோயாளிகள் உள்ள கோண்டியா, வாசிம், புல்தானா, யவத்மால், அமராவதி, அகோலா, ஹிங்கோலி, லாத்தூர், பீட், ஜல்னா, உஸ்மனாபாத், ஜல்காவ், சத்தாரா, கோலாப்பூர், சிந்துதுர்க், ரத்னகிரி ஆகிய 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர இதுவரை கொரோனா பாதிப்பு ஒருவருக்கு கூட ஏற்படாத பண்டாரா, சந்திராப்பூர், கட்சிரோலி, பர்பானி, வார்தா, நாந்தெட், நந்தூர்புர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்குள் கொரோனா நுழையாமல் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் இந்த பகுதிக்குள் நுழைவதை தடுக்க மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story