திருச்சி மாநகரில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் சென்று வரும் பொதுமக்களால் பீதி


திருச்சி மாநகரில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் சென்று வரும் பொதுமக்களால் பீதி
x
தினத்தந்தி 16 April 2020 3:30 AM IST (Updated: 16 April 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் சென்று வரும் பொதுமக்களால் பீதி ஏற்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் இருக்கும் பகுதிகள் சுகாதாரத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் உறையூர், தென்னூர், பாலக்கரை, காஜாபேட்டை உள்ளிட்ட 7 இடங்களில் குறிப்பிட்ட வீதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியில் வரவும் கூடாது. உள்ளே செல்லவும் கூடாது என்பதற்காக மாநகர காவல்துறையால் தடுப்புகள் வைக்கப்பட்டு அவ்வீதிகள் தடை செய்யப்பட்ட பகுதி என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சில நாட்கள் அப்பகுதி போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. பின்னர் போலீசார் அப்பகுதிகளுக்கு செல்லாமல் இதர பகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டனர்.

போலீசார் இல்லை என்பதை தெரிந்து கொண்ட சிலர், வெளியில் இருந்து தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் சென்றுவர தொடங்கினர். மேலும் பால் ஊற்றும் நபர்களும் சர்வசாதாரணமாக செல்ல தொடங்கினர். தடைக்காக போடப்பட்ட கம்பு மற்றும் கயிறுகளை மேலே தூக்கி பிடித்தும், சிலர் கயிறு மற்றும் கம்புகளுக்கு அடியில் புகுந்தும் செல்ல தொடங்கினர். இதனால் பீதி ஏற்பட்டுள்ளது.

திருச்சி காஜாபேட்டை கீழப்புதூரில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நேற்று சிலர் உள்ளே சென்று வந்தனர். இதுகுறித்து மாநகர போலீசாருக்கு புகார் பறக்கவே, அங்கு உடனடியாக போலீசார் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கினர். கொரோனா தொற்றின் வீரியம் தெரியாமல் இன்னமும் மக்கள் அலட்சியம் காட்டுவது அவர்களுக்கு அவர்களே சூனியம் வைத்து கொள்வது போன்றது என சுகாதாரப்பணியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story