திருவெறும்பூர் அருகே, ஏ.டி.எம். மைய காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
திருவெறும்பூர் அருகே ஏ.டி.எம். மைய காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
துவாக்குடி,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பெல்நகரில் சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த மருது (வயது 60) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 மர்மநபர்கள் திடீரென்று மருதுவை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் அந்த நபர்கள் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளைமுயற்சியில் ஈடுபட்டனர். நீண்டநேரமாகியும் எந்திரத்தை உடைக்க முடியவில்லை.
அப்போது ஆட்கள் நடமாட்டம் தென்படவே, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனிடையே மயக்கம் தெளிந்த மருது இது குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை பிரிவினரும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் அந்த பகுதியில் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது, யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கேமராவில் பதிவான காட்சியை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story