கொரோனா சந்தேகம்: மேலும் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி - 297 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை


கொரோனா சந்தேகம்: மேலும் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி - 297 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
x
தினத்தந்தி 16 April 2020 3:30 AM IST (Updated: 16 April 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் மேலும் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 126 பேர் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்றைய பரிசோதனை முடிவில் யாருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்தது.

இதற்கிடையில் நேற்று கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மேலும் 10 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட 10 பேர் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு கண்காணிப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் இன்னும் 113 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை. காத்திருப்பு பட்டியலில் உள்ளது.

ஏற்கனவே அரசு டாக்டர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 2 அரசு டாக்டர்களுக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. நேற்றைய பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள விடுதியில் தங்கி முதுகலை படிக்கும் டாக்டர்கள் மற்றும் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு ஒரு ஆண்டு பயிற்சி பெறும் டாக்டர்கள் ஆகியோர் தங்கி உள்ள பகுதிகள் காலி செய்யப்பட்டு அவர்கள் பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அந்த விடுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மேலும் முதுகலை படிக்கும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் ஆகியோருக்கு ரத்தம், சளி ஆகியவை எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனைக்கு தமிழ்நாடு முழுவதும் 26 தனியார் பரிசோதனை மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மைக்ரோ பயாலஜி லேப் மற்றும் கோவை வி.ஆர்.டி.எல். லேப் ஆகிய 2 பரிசோதனை மையங்கள் கோவை மாவட்டத்தில் பரிசோதனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story