கொடைக்கானலில், பாரில் ஜன்னலை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு - 2 வாலிபர்கள் கைது
கொடைக்கானலில் மதுபாரின் ஜன்னலை உடைத்து மதுபாட்டில்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்,
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் 50-க்கும் மேற்பட்ட தனியார் மது பார்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த மதுபார்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. அதன்படி கொடைக்கானல் அப்சர்வேட்டரி ரோட்டில் உள்ள தனியார் பாரும் அடைக்கப்பட்டது.
இந்த பாரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் சிலர், 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார் ஊழியர் காளஸ்வரன் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரில் மதுபாட்டில்களை திருடிய மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு நாயுடுபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் நடந்து வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், கொடைக்கானல் நாயுடுபுரம் பாக்கியபுரத்தை சேர்ந்த ஜெகன்மேத்யூ (வயது 29), திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த அப்துல் சுல்தான் (22) என்பதும், மதுபாரில் ஜன்னலை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாக்கியபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள மதுபாட்டில்களை நண்பர்களுக்கு கொடுத்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களது கூட்டாளி ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story