வேலூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறிய 2,879 பேர் கைது - 2,292 வாகனங்கள் பறிமுதல்
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 879 பேர் கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 292 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக மார்ச் 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது பொதுமக்கள் பால், காய்கறி, மளிகைப்பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்லும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் கொரோனா வைரஸ் தொற்றை அலட்சியப்படுத்தி வழக்கம்போல் பொதுமக்கள் வீதிகளில் ஜாலியாக வலம் வந்தனர். மோட்டார் சைக்கிள், கார்களில் பலர் சுற்றித்திரிந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரியும் நபர்களை போலீசார் கைது செய்து, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கிறார்கள். மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் இரும்பு கம்பிகள் (பேரி கார்டு) வைத்து தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்த வழியாக வரும் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களை செல்ல போலீசார் அனுமதி அளிக்கின்றனர். மாறாக தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை போலீசார் கைது செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள்.
அதன்படி வேலூர் மாவட்டம் முழுவதும் முதற்கட்ட ஊரடங்கின்போது உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 2 ஆயிரத்து 879 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 292 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று வேலூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story