கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைத்தால் ராணிப்பேட்டை மாவட்டம் மிக விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறும் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைத்தால் ராணிப்பேட்டை மாவட்டம் மிக விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறும் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
x
தினத்தந்தி 16 April 2020 3:45 AM IST (Updated: 16 April 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் ராணிப்பேட்டை மாவட்டம் மிக விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறும் என கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 39 பேர். சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பிய ஒருவரை தவிர மீதமுள்ள 38 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 33 பேர் வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதித்த 39 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 95 சதவீதம் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 9 பேருக்கு அடுத்த கட்ட பரிசோதனை முடிவுகள் வர உள்ளது. அது விரைவில் வந்துவிடும்.

டெல்லி சென்று வந்த கொரோனா அறிகுறி இல்லாதவர்களின் தொடர்புகளும் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகள் வந்த பிறகு தான் கொரோனா பாதிப்பு உள்ளோர் மற்றும் பாதிப்பு இல்லாத நபர்கள் பற்றி முழு விவரம் தெரியவரும்.

கொரோனா பாதித்த 39 பேருடன் முதன்மையாக தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்ததில், 89 பேருக்கு பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. 4 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 8 பேருக்கு கொரோனா பாதிப்பு என முடிவு வந்துள்ளது. இவர்களுக்கு அடுத்த கட்ட பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. ஆக மொத்தம் இதுவரை 346 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இது தவிர கட்டுப்பாட்டு பகுதியில் நடந்த இயற்கை மரணங்களில் கலந்து கொண்டவர்களில் 10 முதல் 15 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளது. காய்ச்சல், இருமல், சளி என மருத்துவமனைக்கு வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெரும்பாலும் இதில் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைகள் செய்வதை மக்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அரசு முறையாக மக்களுக்கு நோய் தொற்று பரவாத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்மேல் குப்பத்தில் நேற்று ஏற்பட்ட நிகழ்வு தொடர்பாக பேசி அங்குள்ளவர்களுக்கும் புரிய வைத்துள்ளோம்.

மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் 4 நகராட்சிகள் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதியை தவிர மற்ற இடங்களில் இறைச்சிக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவில்லை. மற்ற பகுதிகளில் இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டால் உரிய சமூக விலகலை தவறாமல் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். மாவட்டத்தில் இதுவரை 10 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் மக்கள் இதே ஒத்துழைப்பை தொடர்ந்து கொடுத்தால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் குறைந்தால், மிக விரைவில் சிவப்பு கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வெளியேறும்.

வேலூர் அடுக்கம்பாறையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். அவர்களிடம் செல்போன் வீடியோகால் மூலம் பேசி வருகிறோம். சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று மட்டுமே விரும்புகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அடுத்த கட்ட பரிசோதனை முடிவுகளில் பாதிப்பு இல்லை என்று வந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர்களை 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்துகிறோம்.

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 3 பேர், 18 இருந்து 25 வயதுக்குட்பட்டோர் 6 பேர், 26 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்டோர் 29 பேர், 60 வயதுக்குமேல் உள்ளவர் ஒருவர் ஆகியோர் ஆவர். சிகிச்சை முடிந்தவர்களை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்வதில்லை. மருத்துவ குழுவினர், மருத்துவ கல்லூரி டீன் தான் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு கலெக்டர் திவ்யதர்ஷினி கூறினார்.

Next Story