டெங்கு காய்ச்சலுக்கு அரசு டாக்டர் பலி - துக்கம் தாங்காமல் தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


டெங்கு காய்ச்சலுக்கு அரசு டாக்டர் பலி - துக்கம் தாங்காமல் தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 April 2020 11:15 PM GMT (Updated: 16 April 2020 4:29 AM GMT)

கோவையில் தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த அரசு டாக்டர் பரிதாபமாக இறந்தார். துக்கம் தாங்காமல் அவருடைய தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை ரயான்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.வாசுதேவன். எல்.ஐ.சி. முகவர். இவரது மனைவி ஜோதிமணி. இவர்களது மகன் டாக்டர் ஜெயமோகன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நீலகிரி மாவட்டம் அல்லிமாயார் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் இவருக்கு கடந்த 10-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தனது சொந்த ஊரான சிறுமுகைக்கு வந்தார். அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 12-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் இருந்ததால் அங்கு அவருக்கு கொரோனா சந்தேகத்தில் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையே அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை டாக்டர் ஜெயமோகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ஜெயமோகனின் தாய் ஜோதி மணி துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

மகனின் பிரிவை தாங்கிக்கொள்ளாத அவர், வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். பின்னர் மயங்கியநிலையில் கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயமோகன் 2007-ம் ஆண்டில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அப்போது அவருக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் அவருக்கு அரசு ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவபடிப்பு படிக்க இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு டாக்டர் ஒருவர் இறந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்து உள்ளனர்.

Next Story