நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரி கொரோனா சிகிச்சை பிரிவை கலெக்டர் பார்வையிட்டார்
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 45 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்படும் நபர்களை சில நாட்கள் கண்காணிப்பில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி இவர்கள் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு உள்ள கொரோனா நோய் தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவில் வைக்கப்பட உள்ளனர். இதையொட்டி நேற்று இந்த பிரிவை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர் அங்கு மல்டி பாரா மீட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருப்பதை பார்வையிட்டார். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தயார் நிலையில் இருப்பதையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். அப்போது உதவி கலெக்டர் கோட்டைகுமார், தாசில்தார் பச்சைமுத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் வரையப்பட்டு வரும் கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தையும் கலெக்டர் பார்வையிட்டார். முன்னதாக பரமத்திவேலூர் இலங்கை அகதிகள் முகாம் சார்பில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story