தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் ராமன் வேண்டுகோள்


தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் ராமன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 April 2020 12:18 PM IST (Updated: 16 April 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி தன்னார்வலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் தாங்கள் வழங்க விரும்பும் நிதியினை, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், மாவட்ட கலெக்டரிடமும் வழங்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறப்படும் பொருட்கள், மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பில் உரிய அலுவலர்கள் மூலமாக ஆதரவற்றோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும், ஏழை, எளியோருக்கும் சமூக சமையல் கூடங்களில் சமைத்து உணவாகவும், தேவைப்படும் ஏழை குடும்பங்களுக்கு பொருட்களாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், அதேசமயம் நோய் தொற்று பரவுவதை தடுத்திடவும், முறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் எனவும், அவ்வாறு கடைபிடிக்காமல் உதவி செய்ய ஆரம்பித்து விட்டால், நோய் தொற்று தான் அதிகமாகும் என்றும் பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே சேலம் மாவட்டத்தில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் பொருட்களாக வழங்க விரும்பினால் மாவட்ட கலெக்டர் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர், மண்டல அலுவலர்கள், மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர்கள், 33 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், 20 ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் நேரடியாக வழங்கலாம்.

சேலம் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் இதற்கென தனி குழு அமைக்கப்பட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் வழங்கும் பொருட்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் பொருட்களை அரசு அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகை பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு, அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

சேலம் மாவட்டத்தில் உதவி செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் பொருட்களை மக்களுக்கு நேரடியாக வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story