மயிலாடுதுறை பகுதியில் ஒரே நாளில், 7 பேருக்கு கொரோனா
மயிலாடுதுறை பகுதியில் ஒரே நாளில், 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குத்தாலம்,
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாதம்(மார்ச்) 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம்(14-ந் தேதி) முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த ஊரடங்கை அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக அறிவித்தார். அதன்படி மே மாதம் 3-ந் தேதி வரையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்று வந்த மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 12 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் 12 பேரும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேரில், 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அந்த 7 பேரும் உடனடியாக ஆம்புலன்சு மூலம் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 7 பேரில் ஒருவர் மயிலாடுதுறை கூறைநாடு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆவார். மேலும் சீர்காழி அருகே பெருந்தோட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், சீர்காழி அருகே புத்தூரை சேர்ந்த ஒருவருக்கும், தரங்கம்பாடி அருகே ஆயப்பாடியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவள்ளுவர் நகர் பகுதி மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் கொரோனா தொற்று மேலும் பரவாத வகையில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
Related Tags :
Next Story