நெல்லை மாவட்டத்தில் 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் நடத்த அனுமதி - கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் நடத்த அனுமதி - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 17 April 2020 4:30 AM IST (Updated: 16 April 2020 11:14 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி முதல் சில தொழிற்சாலைகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சாலைகள் இயக்க அனுமதி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பொருளாதார சரிவுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வருகிற 20–ந் தேதி முதல் பல்வேறு விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. சில தொழிற்சாலைகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஊரக தொழில் நிறுவனங்கள் நெல்லை மாநகர எல்லைக்கு வெளியே உள்ள நிறுவனங்கள், செங்கல் சூளைகள், நெடுஞ்சாலை உணவகங்கள், வாகனம் பழுது நீக்கும் கடைகள், வேளாண் கருவி விற்பனை மையங்கள், உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள்.

மேலும் தயாரிப்பு நிறுவனங்கள், மீன்பிடி தொழில், மீன் வளர்ப்பு நிறுவனங்கள், தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (அதிகபட்சமாக 50 சதவீத பணியாளர்கள்), இணையவழி வணிக நிறுவனங்கள், கூரியர், சேலைகள், நிலக்கரி உள்ளிட்ட சுரங்கப்பணிகள், கட்டுமான பணிகள் (ஊரக பகுதியில்) கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், அரசு நடவடிக்கைகள் சார்ந்த அழைப்பு மையங்கள்.

மின் சாதனங்கள், தொழில்நுட்பம் பழுது பார்க்கும் சாதனங்கள், எந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள், தச்சுப்பணிகள் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த முன்வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாநில அரசும் இதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அரசின் முடிவுக்கு ஏற்ப நெல்லை மாவட்ட நிர்வாகம் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story