தமிழக-கேரள எல்லையில் வனத்துறையினர் தீவிர ரோந்து - காட்டுப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் தடுக்க நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவால் தமிழக-கேரள எல்லையில் உள்ள காடுகளில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை,
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறது.
முதற்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்த நிலையில், 2-ம் கட்டமாக மே 3- ந் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வன எல்லை பகுதியாக விளங்கும் அடர்ந்த காடு வழியாக சமூக விரோதிகள் ஊடுருவதற்கு வாய்ப்புள்ளதாகவும், அவர்களின் நடமாட்டத்தை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட வனசரகர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் செங்கோட்டை வனசரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி வன அடிவார பகுதியான கண்ணுபுள்ளிமேட்டில் தொடங்கி மிளகு அரிச்சான் பாறை வரையிலான 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதிகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
புளியரை வனவர் பாண்டியராஜ், வனகாப்பாளர்கள் சுப்பிரமணியன், அர்ச்சுனன், ராஜேந்திரன் மற்றும் வனக்குழுவினர் இணைந்து வனப்பகுதி முழுவதையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story