ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் சேர்த்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு


ஊரடங்கு உத்தரவை மீறி  கூட்டம் சேர்த்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 April 2020 4:07 AM IST (Updated: 17 April 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் சேர்த்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திரு.வி.க. நகர், 

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அ.தி.மு.க பிரமுகரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணையத்தின் இயக்குனருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கட்சி நிர்வாகிகளுடன் திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 11 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி அயனாவரம் ஆன்டர்சன் சாலையில் உள்ள திரு.வி.க. நகர் மண்டல அலுவலகம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் கிருஷ்ணமூர்த்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் அம்மா உணவகத்தில் இருந்த டோக்கன்களை மொத்தமாக வாங்கி, அங்கு வந்தவர்களுக்கு வழங்கினார்.

ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக வந்ததாக கூறி இலவச உணவு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அதிகாரிகள் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் வந்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி சமரசம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி நாராயணன், ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் சேர்த்ததாக அயனாவரம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பெரவள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி, தன்னுடன் கிருஷ்ணமூர்த்தி தகராறில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில் பெரவள்ளூர் போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஒரே நேரத்தில் மாநகராட்சி மண்டல அதிகாரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்பேரில் அ.தி.மு.க. பிரமுகர் மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story