தாராவியில் பாதிப்பு 86 ஆக உயர்வு: மும்பையில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது


தாராவியில் பாதிப்பு 86 ஆக உயர்வு: மும்பையில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 17 April 2020 5:00 AM IST (Updated: 17 April 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் தாராவியில் 86 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மும்பையில் 202 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

மராட்டிய தலைநகரும், நாட்டின் நிதி தலைநகருமான மும்பையை கொடிய கொரோனா வைரஸ் புரட்டி போட்டுள்ளது.

மும்பையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவால் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,936 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் மும்பையில் தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது 2 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 299 பேர் கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

116 பேர் பலி

இதேபோல கடந்த சில தினங்களில் மும்பையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானதாக மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 116 ஆகி உள்ளது. கடந்த 2 நாட்களாக மும்பையில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கொரோனா பாதிப்பில் இருந்து புதிதாக 21 பேர் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை மும்பையில் 202 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

தாராவி

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் கடந்த 1-ந் தேதி முதன் முதலில் பாலிகா நகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைகாரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதில் 13 வயது சிறுவன் உள்பட 11 பேர் தாராவி முஸ்லிம் நகரை சேர்ந்தவர்கள். இதுதவிர முகுந்த் நகர், ராஜீவ்நகர், சோசியல் நகர், சாய்ராஜ் நகர், டிரான்சிஸ்ட் கேம்ப், ராம்ஜி சால் பகுதியை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் ஒருவர் பலி

இதேபோல தாராவி லட்சுமி சால் பகுதியை சேர்ந்த 58 வயது நபர் கொரோனாவுக்கு புதிதாக பலியானார். ஏற்கனவே தாராவியில் தமிழ் மூதாட்டி உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் தாராவியில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆகி உள்ளது.

இதற்கிடையே மராட்டியம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

Next Story