சமூக நலத்துறை விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வசதி - துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தகவல்
சமூக நலத்துறை விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக துணை முதல்- மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு எம்.ஜி. ரோட்டில் உள்ள சமூக நலத்துறை உறைவிட பள்ளி விடுதி கட்டிடத்தில் கூலித்தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த விடுதிக்கு துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் நேற்று நேரில் சென்று அங்கு உள்ளவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வெளியூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதி கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5,108 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள 92 விடுதி கட்டிடங்களில் தங்கியுள்ளனர்.
கர்நாடகத்தில் யாரும் பசி-பட்டினியால் வாடக்கூடாது என்பது முதல்-மந்திரி எடியூரப்பாவின் விருப்பம். இதற்காக அவர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சமூக நலத்துறை செயல்பட்டு வருகிறது. பிரச்சினையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், உதவி தேவைப்பட்டால், சமூக நலத்துறையை தொடர்பு கொள்ளலாம்.
இந்த விடுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு தினமும் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியுள்ளவர்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இங்கு தங்கியுள்ள தொழிலாளர்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. அவ்வப்போது அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story