கர்நாடக பள்ளி கல்வித் துறை சார்பில் குழந்தைகளுக்கான யூ-டியூப் சேனல் - முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்


கர்நாடக பள்ளி கல்வித் துறை சார்பில் குழந்தைகளுக்கான யூ-டியூப் சேனல் - முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 April 2020 5:32 AM IST (Updated: 17 April 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பள்ளி கல்வித்துறை சார்பில் குழந்தைகளுக்கான யூ-டியூப் சேனல் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் குழந்தைகளுக்கான யூ-டியூப் சேனல் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த சேனல் தொடக்க நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, சேனலை தொடங்கி வைத்தார்.

இந்த சேனலில் கதைகள், பாடல்கள், ஓவியங்கள், சிறு நாடகம், மேஜிக் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த சேனலுக்கு மக்கள வாணி (குழந்தைகள் சேனல்) என பெயரிடப்பட்டுள்ளது.

தினமும் காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பெற்றோர் தங்களின் ஸ்மார்ட் செல்போனை குழந்தைகளிடம் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. எந்தெந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

முதலில் அரை மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது, அடுத்து வரும் நாட்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு காலம் 1 மணி நேரமாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கற்பனை வளத்தை உருவாக்கும் விதமான நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் தயாரித்து அனுப்பலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

குழந்தைகளே ஒரு விஷயத்தை அடிப்படையாக கொண்டு வீடியோ மூலம் தயாரித்து அதை அனுப்பி வைக்கலாம் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story