கொரோனா நிவாரண தொகை பெற 5 கி.மீ. தூரம் நடந்து வந்த மூதாட்டி - நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி கூறியதையடுத்து திரும்பி சென்றார்


கொரோனா நிவாரண தொகை பெற 5 கி.மீ. தூரம் நடந்து வந்த மூதாட்டி - நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி கூறியதையடுத்து திரும்பி சென்றார்
x
தினத்தந்தி 17 April 2020 4:00 AM IST (Updated: 17 April 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில், கொரோனா நிவாரண தொகை ரூ.1,000 கிடைக்காததால் 5 கி.மீ. தூரத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்திற்கு மூதாட்டி நடந்து வந்தார். அவருக்கு சம்பந்தப்பட்ட கடையிலேயே வழங்க அதிகாரி ஏற்பாடு செய்ததையடுத்து அவர் அங்கிருந்து திரும்பி சென்றார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வலம்பேரி. இந்த ஊரை சேர்ந்தவர் கருப்பையா. இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி குழந்தையம்மாள்(வயது 70). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குழந்தையம்மாள் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1000 மற்றும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த 2-ந்தேதி முதல் இந்த நிவாரணம் வழங்கப்பட்டது.

ஆனால் குழந்தையம்மாள் ரேஷன் கார்டு வைத்திருந்தும், அவர் தனிநபராக இருந்ததால் அவருக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து தனது வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியிடம் தெரிவிப்பதற்காக நடந்தே வந்தார். பின்னர் அவர், வட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தவர்களிடம் தனக்கு கொரோனா நிவாரண தொகை ரேஷன் கடையில் கிடைக்காத தகவலை தெரிவித்தார்.

உடனடியாக இந்த தகவல் வட்ட வழங்கல் அதிகாரி மரியஜோசப்புக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலை கேட்ட அவர் அந்த மூதாட்டியை சம்பந்தப்பட்ட ரேஷன்கடைக்கு செல்லுமாறும், அங்கு அவருக்கு பணம் கிடைக்க தான் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். அதன் பின்னரே அந்த மூதாட்டி அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பி சென்றார்.

இது குறித்து மரியஜோசப் கூறுகையில், குழந்தையம்மாள் வைத்திருந்த ரேஷன்கார்டு நடைமுறையில் இருந்தால் அவருக்கு உடனடியாக ரூ.1000 வழங்கப்படும். அதுவும் அவரின் வீடுதேடிச்சென்று வழங்கப்படும். நடைமுறையில் இல்லை என்றால் அந்த கார்டின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Next Story