ராணிப்பேட்டை மாவட்டத்தில், 148 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்- கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்


ராணிப்பேட்டை மாவட்டத்தில்,  148 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்- கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
x
தினத்தந்தி 16 April 2020 10:00 PM GMT (Updated: 17 April 2020 3:07 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 148 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) 25 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதை நிறைவு செய்துள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது வரை 148 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

டெல்லி சென்று வந்தவர்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களில் 114பேருக்கு பரிசோதனை செய்ததில் 78 பேருக்கு பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது, இருப்பினும், அவர்களை வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். அதில் மாவட்டத்தில் இன்னும் 36 பேருக்கு மட்டுமே பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. அதுவும் விரைவில் வந்துவிடும்.

கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி பல்வேறு வகையில் கண்டறியப்பட்ட 650 பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அது, படிப்படியாகக் குறைந்து தற்போது வரை 148 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 240 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்து முடித்து விட்டோம்.

புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சளி, இருமல் சிகிச்சைக்காக வருபவர்களிடமும் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என இந்த மாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நடமாடும் பரிசோதனை மையம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கொரோனா கண்காணிப்பு அதிகாரி மங்கத்ராம் சர்மா ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆய்வு செய்தார். குறிப்பாக, மேல்விஷாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 24-ந்தேதியில் இருந்து மேல்விஷாரத்தில் சரியான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுவதுமாக அரசின் நடவடிக்கைகள் மட்டுமல்லாது, பொதுமக்களின் பங்களிப்பு, 250 தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்க செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அங்குள்ள மக்களும் தெரிவித்துள்ளனர்.

மேல்விஷாரம், ஆற்காடு, வாலாஜா, அம்மூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்திலும் கண்காணிப்பு அதிகாரி மங்கத்ராம் சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அனைவருக்கும் பரிசோதனை முடிந்து விட்டது. இதற்குமேல் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது.

வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சளி, இருமலுடன் வந்த மூதாட்டி உள்பட 2 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் இதே கட்டுப்பாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படும். அத்தியாவசிய தேவை வழங்குவதில் பாதிப்பு ஏற்படாது. யார் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர்? எனக் கண்டறியப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story