சுத்திகரிக்காமல் கழிவு நீர் வெளியேற்றம்: தோல் தொழிற்சாலை எந்திரங்களுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை
சுத்திகரிக்காமல் கழிவுநீர் வெளியேற்றப்பட்டதால், சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலையில் உள்ள 16 எந்திரங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பேரணாம்பட்டு,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பேரணாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தோல் பொதுச் சுத்திகரிப்பு மையம், தோல் தொழிற்சாலைகளிடம் இருந்து தோல் கழிவுநீரை வாங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் ஊரடங்கை பின்பற்றாமல் ஒருசில தோல் தொழிற்சாலைகள் மட்டும் தொழிலாளர்கள் வைத்து இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டது.
அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி பேரணாம்பட்டு பகுதியில் தாசில்தார் முருகன் தலைமையில் அதிகாரிகள் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர். அப்போது தோல் ஒன்றில் தொழிற்சாலையில் தொழிலாளர்களை வைத்து தோல் பதனிடப்பட்டது தெரிந்தது. அந்தத் தோல் தொழிற்சாலைக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
அதே தோல் தொழிற்சாலையின் தோல் கழிவுநீரை கடந்தசில நாட்களாக சுத்திகரிக்காமல் அப்படியே திறந்த வெளியில் வெளியேற்றியதால் சாலைப்பேட்டை பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் அனுப்பினர். இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு உதவி பொறியாளர் நித்தியலட்சுமி தலைமையில் தாசில்தார் முருகன், மண்டல துணைத் தாசில்தார் வடிவேல், வருவாய் ஆய்வாளர் ரகுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது அந்தத் தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீரை சுத்திகரிக்காமல் திறந்த வெளியில் வெளியேற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் தோல் தொழிற்சாலையில் உள்ள மொத்தம் 16 எந்திரங்களுக்கு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு உதவி பொறியாளர் நித்தியலட்சுமி, தாசில்தார் முருகன் ஆகியோர் ‘சீல்’ வைத்தனர்.
Related Tags :
Next Story