முக கவசங்களை கண்ட இடங்களில் வீசினால் நோய் தொற்று பரவும் - கலெக்டர் எச்சரிக்கை


முக கவசங்களை கண்ட இடங்களில் வீசினால் நோய் தொற்று பரவும் - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 April 2020 10:00 PM GMT (Updated: 17 April 2020 3:07 AM GMT)

முக கவசங்களை கண்ட இடங்களில் வீசினால் நோய் தொற்று பரவும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மொத்தம் 650 பேர் கொரோனா சந்தேகப் பட்டியலில் இருந்து சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பேருக்கு நோய் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 404 பேருக்கு நோய் தொற்று இல்லை. மீதம் உள்ள நபர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவில்லை.மாவட்டத்தில் மொத்தம் 1,176 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் முக கவசங்களை வெளிப்பகுதியை தொடாமல் கவனமாக அகற்றி ப்ளச்சிங் பவுடரில் 10 நிமிடம் ஊறவைத்து பின்னர் எரிக்கவோ அல்லது ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும். முக கவசங்களை பொது இடங்கள் அல்லது குப்பைத் தொட்டிகளில் வீசுவது நோய்த்தொற்றை பரவ வழிவகுக்கும்.

அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் இறப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கேரள மாநிலத்திற்கு வாகனத்தில் செல்ல வேண்டியவர்கள் covid19jagratha.kera-la.nic.in என்ற வலைதள முகவரியில் வாகன அனுமதி கோரி கேரள அரசிடம் விண்ணப்பித்து, வாகன அனுமதி கிடைத்த பின், குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக http:/kanyakumari.nic.in/ என்ற வலைதளத்தில் கேரள மாநிலத்தின் அனுமதியுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Next Story