பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் - கலெக்டர் கிரண்குராலா எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கிரண் குராலா எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி,
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களிலும், வேலைசெய்யும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. மீறி எச்சில் துப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும். மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரில், 2 பேருக்கு 14 நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட மறு பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் முதன்மை மற்றும் பிற தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 65 பேர் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர மாவட்டம் முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 152 பேரிடம் இருந்து ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story