திருச்சியில் கொரோனாவை விரட்டி அடிப்பதற்காக 24 மணி நேரமும் 3 ‘ஷிப்டு’களாக பணியாற்றும் டாக்டர், நர்சுகள்


திருச்சியில் கொரோனாவை விரட்டி அடிப்பதற்காக 24 மணி நேரமும் 3 ‘ஷிப்டு’களாக பணியாற்றும் டாக்டர், நர்சுகள்
x
தினத்தந்தி 17 April 2020 12:13 PM IST (Updated: 17 April 2020 12:13 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை விரட்டி அடிப்பதற்காக திருச்சியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் 24 மணி நேரமும் 3 ‘ஷிப்டு’களாக பணியாற்றி வருகிறார்கள்.

திருச்சி,

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த 32 பேரும் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு நன்றாக குணம் அடைந்து வீடு திரும்பியதன் பின்னணியில் அரசு டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களது குடும்பம், பிள்ளைகளை மறந்து, வீட்டுக்கு கூட செல்லாமல் பணியாற்றியதின் விளைவாகவே தற்போது 32 பேர் ஒரே நேரத்தில் தங்களது வீட்டிற்கு செல்ல முடிந்திருக்கிறது.

கொரோனாவை விரட்டி அடிப்பதற்காக தன்னலம் கருதாமல் திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருபவர்களில் ஒருவரான டாக்டர் லட்சுமி (அரசு மருத்துவ கல்லூரி நுண் உயிரியல் துறை பேராசிரியை) இதுதொடர்பாக கூறியதாவது:-

கடந்த 24-ந்தேதியில் இருந்து அனைத்து டாக்டர்களும், நர்சுகளும் 3 ஷிப்டு களாக 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறோம். வீட்டுக்கு செல்ல முடியாததால் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கேயே செய்து தரப்பட்டு உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை சுமார் 900 பேருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

தற்போது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது. நாள்தோறும் சுமார் 200 பரி சோதனைகள் நடத்தப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் ரத்தம் சேகரிக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள் மூலம் பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா நோயாளிகள் 32 பேர் குணமாகி சென்று இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எங்களது அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் ஜெயபாரதி கூறியதாவது:-

தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தான் பணியாற்றி வருகிறோம். 32 நோயாளிகள் கொரோனாவில் இருந்து மீண்டு அவர்களது வீட்டிற்கு சென்று இருப்பது நாங்கள் செய்யும் பணிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story