மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி நிபந்தனைகளுடன் ஒப்புதல்


மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி நிபந்தனைகளுடன் ஒப்புதல்
x
தினத்தந்தி 17 April 2020 1:53 PM IST (Updated: 17 April 2020 1:53 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை தொடர்ந்து சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் மூன்று மாதங்களுக்கான இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினரும் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருப்பதால் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க கோரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் கவர்னர் தான் அனுமதி தர மறுப்பதாக கூறி அமைச்சர் கந்தசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். குறிப்பாக அரசு ஊழியர், வருமான வரி செலுத்துவோர் ஆகியோருக்கு அரிசி வழங்கக்கூடாது. கார்டு ஒன்றுக்கு மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி வீதம் மூன்று மாதத்துக்கான அரிசியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த அரிசிக்கான தொகையை இந்திய உணவு கழகத்திற்கு வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏற்கனவே அரிசிக்கு பதிலாக நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருவதால் அரிசி வழங்க உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கவர்னர் கிரண்பெடி தனது நிபந்தனையில் கூறியுள்ளார்.

Next Story