ஊரடங்கு உத்தரவு எதிரொலி வாழைத்தார் விலை வீழ்ச்சி ; கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை - விலை கட்டுப்படியாகாததால் விவசாயிகள் கண்ணீர்


ஊரடங்கு உத்தரவு எதிரொலி வாழைத்தார் விலை வீழ்ச்சி ; கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை - விலை கட்டுப்படியாகாததால் விவசாயிகள் கண்ணீர்
x
தினத்தந்தி 17 April 2020 1:53 PM IST (Updated: 17 April 2020 1:53 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆவதால், வாழை விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக வாழை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்யப்பட்ட ஒரு ஆண்டுக்குள் வாழை மரம் விளைச்சலுக்கு வருகிறது. வாழைத்தார்களை வெட்டி, பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் விவசாயிகள் அங்கு கேரள மற்றும் தமிழக வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். கேரள வியாபாரிகள் பெரும்பாலும் தோட்டங்களுக்கு நேரடியாக வந்து வாழைத்தார்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கி செல்கின்றனர்.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து உள்ளது. இதன் காரணமாக விளைச்சல் அதிகமாக இருந்தும், வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஸ்டாலின் பழனிசாமி கூறியதாவது:-

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாழை, நேந்திரம், கதளி, கற்பூரவள்ளி, பூவந்தார், மோரீஸ் ஆகிய ரக வாழை மரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக ஒரு ஏக்கருக்கு 600 வாழை மரங்கள் வரை சாகுபடி செய்யலாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாழைத்தார் விளைச்சல் அமோகமாக உள்ளது. இங்கிருந்து பெரும்பாலும் கேரள மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரள வியாபாரிகள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து வாழைத்தார்களை வெட்டி எடுத்து சென்று விடுவார்கள். அதற்குரிய தொகையை அங்கேயே எங்களிடம் கொடுத்து விடுவார்கள். இதை தவிர பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் சரக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிடக்கிறது. மேலும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கேரளாவில் இருந்து வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருவதில்லை. மேலும் பொள்ளாச்சி பகுதியிலும் வாழைத்தார்கள் விற்பனை இல்லை. இது தவிர பெரும்பாலும் தள்ளுவண்டிகளில் வாழைப்பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் வாழைத்தார்களை அதிகம் வாங்கி செல்வார்கள். ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அதிகம் வெளியே வராததால், அவர்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

விற்பனை குறைவாக இருப்பதால் வியாபாரிகளும் குறைந்த அளவே வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர். முன்பு ரூ.200-க்கு விற்பனை ஆன வாழைத்தார் தற்போது 40 ரூபாய்க்கு தான் விற்பனை ஆகிறது. இதன் காரணமாக வாழைத்தார்கள் வெட்டப்படாமல் மரங்களிலேயே பழுத்து வருகிறது. வெட்டப்பட்ட வாழைத்தார்களும் தேக்கம் அடைந்துள்ளன. பொள்ளாச்சி பகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.விளைச்சலுக்கு வந்து அதிகபட்சமாக 4 நாட்கள் வரை வாழைத்தார்களை மரங்களில் இருந்து வெட்டாமல் பாதுகாக்கலாம். அதன்பிறகு வாழைத்தார்கள் பழுத்து விடும். பழுத்த பிறகு வவ்வால், குருவிகள் கொத்தி விடும். மேலும் எடை தாங்காமல் வாழை மரங்கள் சாய்ந்து விடும். சாய்ந்து கிடக்கும் மரங்களில் உள்ள வாழைத்தார்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி விடும். சேதப்படுத்திய வாழைத்தார்களை அங்கேயே உரமாக போட்டு விடுகிறோம்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தாரில் உள்ள கதளி ரக வாழைக்காய்கள் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.10-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ரூ.18-க்கு விற்பனை ஆன நேந்திரம் ரூ.10-க்கும், ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட கற்பூரவள்ளி ரூ.12-க்கும், ரூ.30-க்கு விற்பனை ஆன செவ்வாழை ரூ.18-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வாழைத்தார்கள் தேக்கம், விற்பனை குறைவு காரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பல கஷ்டங்களை தாங்கி விவசாயம் செய்துவரும் எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு இந்த விலை வீழ்ச்சி கண்ணீரை வரவைக்கிறது. எனவே வாழைத்தார்களை எந்தவித தடையும் இல்லாமல் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம் சிறுமுகை, இரும்பறை, தோலம்பாளையம், அன்னூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, சூலூர் பகுதிகளில் வாழை விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் வாழையை நம்பித்தான் உள்ளனர். தற்போது பெட்டிக்கடைகள் கூட திறக்காததால் வாழைக்கு விலை கிடைக்காத நெருக்கடி நிலை உள்ளது. இங்கிருந்து கேரளாவுக்கு செல்லும் நேந்திரன் வாழைத்தார்கள் வாகன போக்குவரத்து இல்லாததால் முடங்கிவிட்டது.

வாழைக்கு தற்போது தான் அறுவடை சீசன். ஆனால் தற்போது ஊரடங்கு, கொரோனா பிரச்சினை வந்து விட்டதால் வாழைத்தார்கள் குறிப்பிட்ட காலத்தில் வெட்டாததால் மரங்களிலே அழுகிப்போகும் நிலைக்கு வந்து விட்டது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் தாரில் இருந்து காய்களை கிலோவு ரூ.10-க்கு வியாபாரிகள் கேட்பதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு கட்டுப்படியாகாத நிலை உள்ளது. இதனால் வாழை விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது. கோவை மாவட்டம் தவிர கரூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வள்ளியூர், தேனி, கம்பம் பகுதிகளில் உள்ள வாழை விவசாயிகளும் இதே நிலையில்தான் உள்ளனர். ஆகவே முதல்-அமைச்சர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வாழைத்தார் வியாபாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறும். வழக்கமாக ஏலத்திற்கு 2 ஆயிரம் வாழைத்தார்கள் வரை கொண்டு வரப்படும். கொரோனா பாதிப்பு, ஊரடங்கு காரணமாக 500 வாழைத்தார்கள் மட்டுமே ஏலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவாக இருந்தும் விலை அதிகரிக்கவில்லை. ரூ.800-க்கு விற்பனை ஆன செவ்வாழைத்தார் ரூ.400-க்கும், ரூ.400-க்கு விற்பனை ஆன மோரீஸ் தார் ரூ.200-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோன்று மற்ற வாழைத்தார்கள் விலையும் பாதிக்கு பாதி குறைந்து விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story