கூடலூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசம் - வீடுகள், ஆட்டோ சேதம்


கூடலூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசம் - வீடுகள், ஆட்டோ சேதம்
x
தினத்தந்தி 17 April 2020 1:53 PM IST (Updated: 17 April 2020 1:53 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வீடுகள் மற்றும் ஆட்டோவை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் கூடலூரில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். எனினும் காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கூடலூர் அருகே முதுமலை ஊராட்சி குனில் பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்தன.

தொடர்ந்து அங்குள்ள பலா மரங்களில் காய்களை துதிக்கையால் பறித்து ருசித்தன. பின்னர் அருகில் உள்ள சுப்பிரமணி என்பவரது வீட்டின் பின்புறம் முற்றுகையிட்டன. உடனே சுப்பிரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் முன்பக்கம் உள்ள அறைக்குள் சென்று பதுங்கினர்.

இதையடுத்து காட்டுயானைகள் பின்பக்க சுவர் மற்றும் மேற்கூரையை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும் சமையல் அறையில் இருந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை தின்றன. இது தவிர தளவாட பொருட்களும் சேதம் அடைந்தன. இதற்கிடையில் முன்பக்க கதவு வழியாக சுப்பிரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டபடி வெளியே தப்பி ஓடினர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், ஊராட்சி தலைவர் சுனில், ஒன்றிய கவுன்சிலர் கங்காதரன் ஆகியோர் நேரில் வந்து, பார்வையிட்டனர்.

இதேபோன்று கூடலூர் அருகே உள்ள பாண்டியாறு குடோன் பகுதிக்குள் நேற்று காலை 6.30 மணிக்கு 2 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்கு ஸ்ரீகுமார் என்பவரது வீட்டின் ஜன்னலை உடைத்தது. மேலும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவை சேதப்படுத்தியது. உடனே அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். அதன்பிறகு தகவல் கிடைத்ததும், தேவாலா வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

Next Story