பெரும்பாறை பகுதியில் ரூ.50 கோடி மிளகு தேக்கம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாறை பகுதியில் ரூ.50 கோடி மிளகு தேக்கம் அடைந்துள்ளது.
பெரும்பாறை,
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, குப்பம்மாள்பட்டி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரியூர், பாச்சலூர், வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதியில் காபி, மிளகு, சவ்சவ், பீன்ஸ் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இங்குள்ள தோட்டங்களுக்கு வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சித்தரேவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள். இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் திண்டுக்கல், மதுரை, பட்டிவீரன்பட்டி நகரங்களுக்கும் மற்றும் கேரளாவுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் மலைப்பாதை மூடப்பட்டு உள்ளது. ஜீப், சரக்கு வாகனம் இயக்கப்படாததால் கூலித்தொழிலாளர்களால் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல முடிவதில்லை. மேலும் விளை பொருட்களையும் விற்பனைக்காக கொண்டு செல்ல முடியவில்லை.
குறிப்பாக தற்போது மலைப்பகுதியில் மிளகு சீசன் தொடங்கி உள்ளது. இதனால் கொடிகளில் மிளகு காய்த்து தொங்குகின்றன. ஆனால் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் மிளகு பறிக்க முடியாமல் உதிர்ந்து வருகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்களை வைத்தே விவசாயிகள் மிளகை பறித்து வருகின்றனர். அத்துடன் அதனை விற்பனைக்கு அனுப்ப முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மிளகு விவசாயிகள் கூறுகையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் மிளகு பறிக்க முடிவதில்லை. நாங்களாகவே பறித்த மிளகுகளை வெளியில் கொண்டு செல்ல முடியாமல் தோட்டங்களிலேயே பச்சை மிளகை குவித்தும், மூட்டையாகவும் அடுக்கி வைத்துள்ளோம். போக்குவரத்து முடங்கியதால் தோட்டங்களில் ரூ.50 கோடி மதிப்பிலான மிளகு தேக்கம் அடைந்துள்ளன. எங்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதே நிலை நீடித்தால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றனர்.
Related Tags :
Next Story