தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - டாக்டர்கள் கைதட்டி வழியனுப்பினர்


தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - டாக்டர்கள் கைதட்டி வழியனுப்பினர்
x
தினத்தந்தி 17 April 2020 1:53 PM IST (Updated: 17 April 2020 1:53 PM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை டாக்டர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

ஆண்டிப்பட்டி,

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 31-ந்தேதி கம்பம், சின்னமனூர், போடி, உத்தமபாளையம், தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களை கொரோனா சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த 20 பேருக்கும் 2 முறை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 18 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதையடுத்து குணமடைந்த அவர்கள் 18 பேரும் நேற்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கொரோனா வார்டில் இருந்து வெளியே வந்த 18 பேருக்கும் டாக்டர்கள் பூ, பிஸ்கட், பழங்கள் மற்றும் மருந்துகள் கொடுத்தனர். பின்னர் வாசல் பகுதிக்கு வந்த அவர்களை, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் இளங்கோவன், துணை முதல்வர் எழிலரசன், நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமரன், துணை நிலைய மருத்துவ அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் அனைவரும் கைதட்டி வாகனங்களில் வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 41 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த னர். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்கள் வருகிற 2 வாரங்களுக்கு வீட்டில் தனியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் யாருக்கும் தற்போதுவரை வெண்டிலேட்டர் வைக்கும் நிலை ஏற்படவில்லை. அவர்கள் மருந்துகளாலேயே குணமடைந்து உள்ளனர். இன்னும் 23 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

Next Story