கவர்னர் மாளிகை முன் அமைச்சர் கந்தசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா - தரையில் அமர்ந்து போராட்டம்
கவர்னர் மாளிகை முன் அமைச்சர் கந்தசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி தடையாக இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே குற்றஞ்சாட்டி இருந்தார். இந்தநிலையில் அனைவருக்கும் இலவச அரிசி வழங்க கோரி அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்தில் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சரான கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் திடீரென கவர்னர் மாளிகைக்கு வந்தனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டம் குறித்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க கவர்னரிடம் இருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. கோப்புகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னர் தான். அவரிடம் கேட்காமல் அரசை குற்றம் சாட்டி அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துகின்றனர். புதுவை அரசு எதுவுமே செய்யாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
புதுவை அரசு நிதியில் இருந்து மக்களுக்கு ரூ.60 கோடி நிவாரணம் வழங்கி உள்ளோம். ஆனால் மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி தரவில்லை. அதை பெற்றுத்தரவேண்டியது கவர்னர் தான். அதை அவர் செய்யாததால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கான கோப்பு போராட்டக் களத்தில் இருந்த அமைச்சர் கந்தசாமியிடம் வந்தது. அதில் அவர் கோப்பில் கையெழுத்திட்டு கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் அங்கு வந்து கவர்னர் மாளிகைக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்து விடும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அதையேற்று அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story