ஊத்துக்குளி அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; பெண் குழந்தை பிறந்தது


ஊத்துக்குளி அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; பெண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 18 April 2020 4:45 AM IST (Updated: 18 April 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

நல்லூர், 

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, சர்க்கார் பெரியபாளையம், தாமரை கோவில், 2-வது வீதியில் வசித்து வருபவர் காளிமுத்து (வயது 52). சரக்கு வாகன டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (46), பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பிரவீன் என்ற 14 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் உமா மீண்டும் கர்ப்பமடைந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் உமாவிற்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு கூலிபாளையம் நால்ரோடு வழியாக நல்லூர் வரும் வழியில் வந்துள்ளனர். பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டதால் இருசக்கர வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் உமாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளது. அப்போது பிரசவவலி மீண்டும் அதிக அளவில் ஏற்பட்டதால் மருத்துவ உதவியாளர் ஆர்.மீனா (23) ஆம்புலன்சை நிறுத்த சொல்லியுள்ளார்.

அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் ஈஸ்வரன் கோவில் முன்பு இரவு 2 மணிக்கு ஆம்புலன்சை நிறுத்தி பிரசவம் பார்த்தார். 2.10 மணியளவில் அழகிய பெண் குழந்தையை உமா பெற்று எடுத்தார். மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயையும், குழந்தையையும், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பிரசவ வார்டில் சேர்த்தனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

தாயும், குழந்தையையும் உரிய நேரத்தில் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் ஆர்.மீனாவையும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஜே.எஸ்.முத்துகிருஷ்ணனையும் அனைவரும் பாராட்டினார்கள்.

Next Story