ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிப்பால் தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா ரத்து


ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிப்பால் தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா ரத்து
x
தினத்தந்தி 18 April 2020 4:00 AM IST (Updated: 18 April 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், 

ஊரடங்கு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நோட்டீசு தஞ்சை பெரியகோவில் முன்பு ஒட்டப்பட்டுள்ளது.

பெரியகோவில்

உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடந்தது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சித்திரை திருவிழா தேரோட்டம் 100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

சித்திரை திருவிழா

அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த சித்திரை திருவிழாவிற்காக குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் நடைபெற இருந்த மண்டல பூஜையானது 24 நாட்களாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுலா தலங்கள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி தஞ்சை பெரியகோவிலும் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

கோவிலில் வழக்கம்போல் நான்கு கால பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. பிரதோஷ நாட்களில் கூட பக்தர்கள் அனுமதியின்றி கோவில் குருக்கள் மட்டுமே பெரிய கோவில் மகா நந்திக்கு அபிஷேகம் செய்து வருகிறார்.

ரத்து

ஊரடங்கு உத்தரவு கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்து விடும் என எண்ணியிருந்த நிலையில் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக பெரிய கோவில் முன்பு அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது. நேற்று நடைபெற இருந்த கொடியேற்று விழாவும் நடைபெறவில்லை.

Next Story