படப்பை அருகே, வடமாநில தொழிலாளர்களை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
படப்பை அருகே ஏரியில் குளித்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை கத்தியால் வெட்டி செல்போன் பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்கி இருந்து ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிவநாத்சிங் (வயது 26), குல்தீப் கேர்வால் (21), மந்தீப்சிங் (21) உள்பட மொத்தம் 6 பேர் புதுநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் குல்தீப் கேர்வாலிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்தனர். மேலும் பணம் கேட்டு மிரட்டிய அவர்கள் சிவனாத் சிங், மற்றும் மந்தீப்சிங், ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
இதனைத்தொடர்ந்து, காயம் அடைந்த நிலையில் கிடந்த சிவநாத்சிங்கை நண்பர்கள் மீட்டு, காட்ரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், உத்தரவின்பேரில், சோமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர் களை வலை வீசி தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்று நல்லூர் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சோமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த எலியாப் என்றவிக்னேஷ் (18), அதே பகுதியை சேர்ந்த கொரில்லா என்ற விக்னேஷ் (19) மற்றும் சிறுவர்கள் உள்பட 4 பேர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன், மற்றும் மோட்டார் சைக்கிள், கத்தி, ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.மேலும் பிடிபட்ட 2 சிறுவர்களை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story