திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான வார்டு அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டம்


திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான வார்டு அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 April 2020 4:00 AM IST (Updated: 18 April 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர், 

கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக சிறப்பு வார்டுகளையும் சில இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் எங்கெல்லாம் காலியாக இடம் உள்ளதோ அங்கும் இது போன்று வார்டுகள் அமைத்து தயார் நிலையில் இருக்க ஆயத்த பணிகளை செய்து வருகிறது. நோய் தொற்று தீவிரமடைந்தால் டாக்டர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் அங்கேயே தங்குவதற்காக வாய்ப்புள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம், சமுதாய நலக்கூடங்கள், குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான காலியாக உள்ள புதிய வீடுகள் போன்றவற்றை கண்டறிந்து எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன்படி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 10 மாடி கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இன்னும் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அதேபோல் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியிலும் புதிதாக ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு இன்னும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. எர்ணாவூர் நேதாஜி நகரில் ஒதுக்கீடு செய்யப்படாத சலவையாளர்கள் குடியிருப்பு உள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்த இடங்களில் எல்லாம் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான வார்டுகள் அமைக்க தேர்வு செய்து உள்ளனர். ஆனால் இதுபற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் தங்கள் பகுதியில் பரிசோதனை மையங்கள் அமைக்கவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான வார்டுகள் அமைக்கவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனிமனித சமுதாய இடைவெளியை கடைபிடிக்காமல் திருவொற்றியூர், எண்ணூர், எர்ணாவூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story