கொரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் காலதாமதம்
மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவு தெரிவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க வழி வகை காண வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 689 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
தற்போதுள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் முடிவுகள் தெரிய மிகுந்த காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. சோதனை முடிவுகள் காலதாமதம் ஆகும் நிலையில் அவை துல்லியமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகளும் மதுரை அரசு ஆஸ்பத்திரியை நம்பித்தான் உள்ளது.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கான உபகரணம் விரைவில் செயல்பட தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் உபகரணமும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ரேபிட் கிட் உபகரணம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் மத்திய அரசால் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு இந்த உபகரணத்தை விரைந்து அனுப்ப மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகமும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலேயே கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும். சோதனை முடிவுகள் தெரியாத நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று எந்த நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
Related Tags :
Next Story