நகராட்சி முழுவதும் ‘சீல்’: பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி - அவருடன் சீட்டு விளையாடிய நண்பர்களுக்கு பரிசோதனை
பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் நகராட்சி முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. அவருடன் சீட்டு விளையாடிய நண்பர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை சேர்ந்த ஒருவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் இவர் வசித்து வந்த வீட்டை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி குமணன்சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் சாலையின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பூந்தமல்லிக்குள் நுழையும் பகுதி, வெளியேறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
‘சீல்’ வைப்பு
பூந்தமல்லி டிரங்க் சாலை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் இரும்பு மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாத வகையிலும், வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையிலும் சீல் வைக்கப்பட்டுஉள்ளது.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட அவர், ஊரடங்கில் பொழுதை கழிக்க தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடி உள்ளார். இதனால் அவரது நண்பர்கள் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்ய அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கிருமி நாசினி
அத்துடன் அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதி முழுவதும் தினமும் 3 வேளையும் கிருமி நாசினி மற்றும் பிளிச்சீங் பவுடர் தெளிக்கும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கொடுக்கப்பட்டுள்ள கடைகளின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story