கர்நாடகாவில் இருந்து வந்த 15 யானைகள் அத்திமுகம் பகுதியில் தஞ்சம்


கர்நாடகாவில் இருந்து வந்த 15 யானைகள் அத்திமுகம் பகுதியில் தஞ்சம்
x
தினத்தந்தி 18 April 2020 3:30 AM IST (Updated: 18 April 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக வனப்பகுதியில் இருந்து வந்த 15 யானைகள் அத்திமுகம் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை, அத்திமுகம் ஆகிய பகுதிகள் கர்நாடக எல்லையையொட்டி உள்ளன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கோலார், கே.ஜி.எப். ஆகிய வனப்பகுதிகளிலிருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி, அத்திமுகம் அருகே ஏ.செட்டிப்பள்ளி மற்றும் சுற்றுப்புறமுள்ள காட்டில் பதுங்கி விடுகின்றன.

மேலும் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அங்குள்ள விவசாய தோட்டங்களில் விளை பயிர்களை சேதம் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கே.ஜி.எப். காட்டிலிருந்து 15 யானைகள் கூட்டமாக வெளியேறி அத்திமுகம் அருகே நீலிவங்காவில் புகுந்தன.

பின்னர் அந்த யானைகள் அங்குள்ள காட்டில் தஞ்சம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த யானைகளை பேரண்டபள்ளி, சானமாவு வழியாக தளி அருகே ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியை, நேற்று மாலை மேற்கொண்டனர். யானைகள் கூட்டமாக தங்கள் பகுதியில் பதுங்கியிருப்பதால், நீலிவங்கா, ஏ.செட்டிப்பள்ளி, தோரிப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி, அத்திமுகம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மிகவும் அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர்.

Next Story