ஊரடங்கால் வேலையிழந்து தவிப்பு: 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப ஏற்பாடு - மராட்டிய அரசு நடவடிக்கை
ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மராட்டிய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மும்பை,
கொரோனா ஊரடங்கு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் மராட்டியத்தில் சுமார் 38 சர்க்கரை ஆலை வளாகங்களில் 1 லட்சத்து 31 ஆயிரம் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சர்க்கரை ஆலை மற்றும் அதனை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வந்த இவர்கள் தற்போது வேலை இழந்தும், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும் தவிக்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்து நிபந்தனையுடன் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப இருப்பதாக மராட்டிய அரசு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக மராட்டிய சமூகநீதித்துறை மந்திரி தனஞ்சய் முண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கிராமங்களுக்கு திரும்பலாம்
எனது தொழிலாளர் சகோதரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் இப்போது உங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பலாம். இது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசாங்கம் வகுத்துள்ள விதிகளுக்குட்பட்டு வீடு திரும்பி, உங்கள் கிராமங்களையும், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். அங்கு வீட்டுக்குள்ளேயே இருங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல அனுமதிப்பதற்கான அரசின் சுற்றறிக்கையையும் மந்திரி தனஞ்செய் முண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மாநில பேரிடர் மேலாண்மை, உதவி மற்றும் மறுவாழ்வுத்துறை, வருவாய்துறையால் கூட்டாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மராட்டியம், கர்நாடக எல்லைப் பகுதிகள், மாநிலத்தின் பிறபகுதிகளில் சிக்கி தவிக்கும் பீட் மற்றும் அகமது நகரை சேர்ந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சான்றிதழ் பெற வேண்டும். மேலும் கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, பின்னர் அவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் செல்வதற்கு தேவையான அனுமதிகளை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி கடந்த 14-ந் தேதி வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 1,000 பேர் மும்பை பாந்திரா ரெயில் நிலையம் அருகே திரண்டு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் வெளிமாநில தொழிலாளர்களை திரும்ப அனுப்புவது குறித்து அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story