ஊரடங்கு உத்தரவால், கடந்த 25 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் 350 தனியார் பஸ்கள் நிறுத்தம் வருமானம் இன்றி தவிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்கள்
ஊரடங்கு உத்தரவால் கடந்த 25 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் 350 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வருமானம் இன்றி 3 ஆயிரம் தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
ஊரடங்கு உத்தரவால் கடந்த 25 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் 350 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வருமானம் இன்றி 3 ஆயிரம் தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர மற்றவர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையும் மீறி தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
350 பஸ்கள் நிறுத்தம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், சுற்றுலா கார், வேன், பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் பஸ்கள், கார், ஆட்டோக்கள் இயக்கப்படாமல் உள்ளது. டெல்டா மாவட்டமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஆம்னி பஸ்கள், சுற்றுலா பஸ்கள் என 350-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்களில் மட்டும் டிரைவர், கண்டக்டர்கள், தொழிலாளர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கடந்த 25 நாட்களாக வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
சொற்ப சம்பளம்
இது குறித்து தமிழ்நாடு பஸ் மற்றும் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழக முதல்-அமைச்சர் மற்றும், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நகரங்கள், கிராமங்களுக்கு இடையே தனியார் பஸ்கள், சுற்றுலா பஸ்கள், ஆம்னி பஸ்கள், மினி பஸ்கள் என 350-க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள், கிளனர்கள், மெக்கானிக்குகள் என 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் சொற்ப சம்பளத்திலும், அன்றாடம் கிடைக்கும் படி பணத்திலேயும் மட்டுமே தங்கள் வாழ்க்கையை ஓட்டி வந்தனர்.
வருமானம் இன்றி தவிப்பு
இவர்களில் ஒரு சில டிரைவர்கள் மட்டுமே நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும்பாலான தனியார் பஸ் ஊழியர்கள் நல வாரியத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பஸ்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களும், அவர்கள் குடும்பத்தினரும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும் தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு, முதல்-அமைச்சர் ஊரடங்கு காலம் வரை தனியார் பஸ் நிர்வாகத்திடம் ஊதியம் வழங்க கருணையோடு உத்தரவிட்டிருந்தார். ஆனால் பல உரிமையாளர்கள் ஊதியம் வழங்கவில்லை. மேலும் தொழிலாளர் வாரியத்தில் நடத்துனர்கள் பதிவு செய்து கொள்ள சட்டத்திலும் இடமில்லை என சொல்லி விட்டார்கள்.
நிவாரணம் வழங்க வேண்டும்
எனவே தமிழக அரசும், தனியார் பஸ் உரிமையாளர்களும், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து இந்த தொழிலையே நம்பி இருக்கும் சூழலில் அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story