நாகை மாவட்டத்தில், ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 213 பேர் மீது வழக்கு
நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 213 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 142 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 213 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 142 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
213 பேர் மீது வழக்கு
ஊரடங்கையையொட்டி நாகை மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று முன்தினம் மட்டும் 213 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 142 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் இதுவரை 3,851 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2,558 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மது விலக்கு குற்றங்களை தடுக்கும் பொருட்டு இதுவரை 422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 394 மது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story