மேச்சேரி அருகே, நர்சரி கார்டனில் திடீர் தீ - ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
மேச்சேரியில் நர்சரி கார்டனில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.
மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கோல்காரனூரில், எடப்பாடியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மனைவி ஜெயா நர்சரி கார்டன் நடத்தி வந்தார். இந்த நர்சரி கார்டனையொட்டி அலுவலகமும், விதை உள்ளிட்ட மூலப்பொருட்கள் வைக்கும் இடமும் கொட்டகையால் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் அந்த கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நங்கவள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் மேச்சேரி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து நர்சரி கார்டன் கொட்டகையில் எப்படி தீப்பிடித்தது? என விசாரணை நடத்தினர். இதில் நர்சரி கார்டன் கொட்டகையையொட்டி ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரில் காகம் உட்கார்ந்துள்ளது. இதனால் தீப்பொறி ஏற்பட்டு, டிரான்ஸ்பார்மர் கீழே குவிக்கப்பட்டு இருந்த காய்ந்த சருகுகளில் விழுந்துள்ளது. இதில் அந்த சருகுகளில் தீப்பிடித்து அந்த தீ கொட்டகைக்கு பரவியது தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story