வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் விளைச்சல் அதிகம் இருந்தும் கிலோ ரூ.5-க்கு விற்பனையாகும் முருங்கைக்காய்


வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் விளைச்சல் அதிகம் இருந்தும் கிலோ ரூ.5-க்கு விற்பனையாகும் முருங்கைக்காய்
x
தினத்தந்தி 18 April 2020 9:55 AM IST (Updated: 18 April 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

முருங்கைக்காய் விளைச்சல் அதிகம் இருந்தும், அதனை விற்பனைக்காக வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது.

அரவக்குறிச்சி, 

முருங்கைக்காய் விளைச்சல் அதிகம் இருந்தும், அதனை விற்பனைக்காக வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

முருங்கைக்காய்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். தற்போது, வறட்சி நிலவி வரும் வேளையில் கிணறுகளில் இருக்கும் சிறிதளவு நீரைக்கொண்டு முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் முருங்கைக்காய் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பட்டு வந்தது. அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், ஆத்துமேடு, பள்ளப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் முருங்கைக்காய் கமிஷன் மண்டி உள்ளது. விவசாயிகள் கமிஷன் மண்டியில் காய்களை விற்றுவிடுகிறார்கள். வியாபாரிகள், அதனை வாங்கி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைப்பது வழக்கம்.

ரூ.5-க்கு விற்பனை

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதி முருங்கைக்காய்கள் ஒருசில இடங்களுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது.

அதனால் முருங்கைக்காய் கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை மட்டுமே விலைபோகிறது. வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் முருங்கைக்காய்களை அனுப்பிவைத்தபோது, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. தற்போது, மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

போக்குவரத்து குறைவு

இதுதொடர்பாக அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், அதிகளவு முருங்கை பயிரிட்டுள்ளோம்.

தற்போது ஊரடங்கு காரணமாக போக்குவரத்து குறைந்ததால் முருங்கைக்காய்களை அதிகளவு அனுப்பமுடிவதில்லை. நாங்கள் ஆட்களுக்கு கூலி கொடுத்து முருங்கைக்காய்களை பறித்து விற்பனைக்கு கொண்டுசென்றால் பறிக்க ஆகும் கூலி கூட எங்களுக்கு கிடைப்பதில்லை.

ஆகையால் தற்போது முருங்கைக்காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுவிடுகிறோம். முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக காணப்படும் அரவக்குறிச்சி பகுதியில் குளிர்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும் என்றனர்.

Next Story