திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் இல்லை - சிறப்பு அதிகாரி மங்கத்ராம் சர்மா பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதிதாக கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் இல்லை, என கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பு அதிகாரி மங்கத்ராம்சர்மா தெரிவித்தார்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த தனியார் கல்லூரி, திருமண மண்டபம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அதிகாரி மங்கத்ராம் சர்மா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணியில் மற்ற மாவட்டங்களை விட, திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களை கொண்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதிதாக கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் இல்லை. மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையில் கட்டுப்பாட்டு விதிகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தியவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டு அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள பகுதிகளில் ஒருவருக்கும் நோய் தொற்று பரவாமல் இருக்க, 2-வது முறையாக ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்படும். சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் அனைத்து மாவட்டத்துக்கும் கேட்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு இருப்பதால், நோய் தொற்று அதிகமாக இருக்கும் மாவட்டங்களுக்கு முதலில் அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக இதர மாவட்டத்துக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story