ஆரணி சூரியகுளம் அருகில் செயல்பட் காய்கறி மொத்த வியாபார கடைகள் இடமாற்றம் - சமூக விலகலை கடைப்பிடிக்காததால் நடவடிக்கை
ஆரணி சூரியகுளம் அருகில் செயல்பட்ட காய்கறி மொத்த வியாபார கடைகளுக்கு வருவோர் சமூக விலகலை கடைப்பிடிக்காததால், காய்கறி கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
ஆரணி,
ஆரணி சூரியகுளம் அருகில் காய்கறி வியாபாரிகளுக்கான மொத்த வியாபார கடைகள் செயல்பட்டு வருகிறது. அங்கு, வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணிந்து வராமலும், சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருந்து வந்தனர். வியாபாரிகளும், பொதுமக்களை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில் காய்கறி வியாபாரிகளுக்கான மொத்த வியாபார கடைகளை மூடி விட்டு, ஆரணி நகரின் எல்லைப்பகுதியான இரும்பேடு கூட்ரோடு இந்திராகாந்தி சிலை எதிரே உள்ள காலி இடங்களுக்கு மாற்றப்பட்டு, அங்குக் கடைகளை அமைத்து காய்கறிகளை விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த இடங்களை நேற்று காலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோ.வனிதா, ஆரணி உதவி கலெக்டர் இல.மைதிலி, நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அதிகாரிகள், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.எஸ்.கே.சாதிக்பாஷா, செயலாளர் மோகன் ஆகியோரிடம் கூறுகையில், ஊருக்கு வெளியில் காய்கறி லாரிகள், வேன்கள் வந்து செல்ல வேண்டும். நகருக்குள் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும், என்றனர்.
மேலும் ஆரணி பகுதியில் இருந்து மேல்மருவத்தூர், செஞ்சி, சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆற்காடு உள்ளிட்ட நகரங்களுக்கு காய்கறிகள் ஆரணியில் இருந்து செல்வதால் ஊருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று அச்சம் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காய்கறி கடைகள் ஞாயிற்றுக்கிழமையில் (அதாவது நாளை) இருந்து செயல்படும், என்றனர்.
அப்போது ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு இ.செந்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணி, ரேகாமதி, நகராட்சி பொறியாளர் கணேசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், தாசில்தார் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story