வேலூரில் தங்குமிடம், உணவு வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வடமாநில தொழிலாளர்கள் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


வேலூரில் தங்குமிடம், உணவு வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வடமாநில தொழிலாளர்கள் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 April 2020 4:49 AM GMT (Updated: 18 April 2020 4:49 AM GMT)

தங்குமிடம், உணவு வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் மாநகரப்பகுதிகளில் ஐஸ்கிரீம், பொம்மை, பலூன், போர்வை, பானிபூரி போன்ற வியாபாரத்தில் பீகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, கொணவட்டம், சேண்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் பலூன், போர்வை உள்ளிட்டவற்றை தெரு, தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தங்களின் உணவு மற்றும் இதர செலவுகளை செய்து வந்தனர்.

தற்போது கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வடமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். தினமும் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த மாத வாடகையை வீட்டு உரிமையாளர்கள் கொடுக்கும்படி கூறுகின்றனர். அவ்வாறு தர முடியாதவர்களை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேதனை அடைந்த 10 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தங்குமிடம், உணவு வழங்கக்கோரி நேற்று காலை 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் இதுகுறித்து வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சத்துவாச்சாரி கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் அங்கு வந்து வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் வேலை இல்லாததால் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே 3 நேரமும் உணவு வழங்க வேண்டும். அல்லது சமைப்பதற்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு அங்கிருந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த உணவு பொட்டலங்களை வழங்கி பசியாற செய்தனர்.

சிறிதுநேரத்துக்கு பின்னர், மாநகராட்சி மூலம் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும், வாடகை வசூலிக்க வேண்டாம் என்று வீட்டு உரிமையாளர்களிடம் அறிவுறுத்துவதாகவும் வருவாய்துறையினர், அவர்களிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் தங்குமிடம், உணவு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே ஒன்று திரண்டு நின்ற சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story